மதுரையில் இந்திய பெண்கள் கூட்டமைப்பு ( ஐ.டபிள்யூ.என்.) நடத்திய டிஜிட்டல் தொழில்முனைவு கருத்தரங்கில் அமைச்சர் தியாகராஜன் பேசினார்.

Published Date: August 14, 2025

CATEGORY: EVENTS & CONFERENCES

இப்போதைய தேவை டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவு

"டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவை இன்னும் கூடுதலாக கற்றுக் கொள்ள வேண்டும்'' என மதுரையில் இந்திய பெண்கள் கூட்டமைப்பு ( ஐ.டபிள்யூ.என்.,) நடத்திய டிஜிட்டல் தொழில்முனைவு கருத்தரங்கில் அமைச்சர் தியாகராஜன் பேசினார்.

அவர் பேசியதாவது: தமிழக பொருளாதாரம் என்பது பொருளாதாரம் சார்ந்த வளர்ச்சி மட்டுமல்ல, சமூக மேம்பாட்டையும் உள்ளடக்கியது என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்துள்ளார். தற்போது 9.6 சதவீதம் என்பதிலிருந்து 11.9 சதவீதமாக வளர்ந்துள்ளது என்பது தமிழகத்தின் உண்மையான வளர்ச்சி பொருளாதாரம்.

இந்தியாவுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் 50 சதவீத பெண்கள் எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், இன்ஜினியரிங் உட்பட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளனர். டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவை இன்னும் கூடுதலாக கற்று கொள்ள வேண்டும்.

நான் நிதியமைச்சராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட ஏழை மாணவிகளுக்கான மாதாந்திர கல்வி உதவித்தொகை மூலம் 2 லட்சம் பேர் வரை பயன்பெற்றுள்ளனர். தொழில்நுட்பத்தை நாம் பெருமளவில் செயல்படுத்தாவிட்டால் ஜனநாயகத்திற்கு எதிர்காலம் இல்லை. தொழில்நுட்பமானது அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கையாக விளங்குகிறது என்றார்.

தென்மண்டலத் தலைவர் கவுரி, தமிழக நிர்வாகிகள் அமுதவல்லி, சவிதா, டி.என். ஸ்டார்ட் அப் சி.இ.ஓ.,சிவராஜா, சி.ஐ.ஐ., மதுரை மண்டல தலைவர் அஸ்வின் தேசாய் கலந்து கொண்டனர். மதுரை கிளை பொறுப்பாளர் பூர்ணிமா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

 

Media: Dinamalar